Description
நதியாக ஓடும் மழைத்துளிகள்
பூக்கள் எங்கே இருக்கிறதோ அங்கே தேனும் இருக்கும். சுடர்கள் எங்கே இருக்கிறதோ அங்கே வெளிச்சங்கள் இருக்கும்.
நதிகள் எங்கே இருக்கிறதோ அங்கே தாவரங்கள் இருக்கும்.
கலீல்கிப்ரான் எழுத்துகள் எங்கே இருக்கிறதோ அங்கே ஞானமும் அழகும் இருக்கும்.
காலம் சிலரை அழகுப்படுத்துகிறது. சிலர் காலத்தை அழகுப்படுத்துகிறார்கள்.
சாசுவதத்தின் சந்நிதியில் நந்தா விளக்குகளாகச் சுடர்வீசிக் கொண்டிருக்கும் எழுத்துகளால் காலத்தை அழகுப்படுத்தியவர் கலீல் கிப்ரான்.
எழுத்துகளை இத்தனை அழகாகவும் படைக்க முடியுமோ என்ற பிரமிப்பே கிப்ரானின் எழுத்துகளை வாசிக்கும்போது அவர் கதிர்களில் எல்லாமே முற்றிய தானியங்கள் பதர்களே கிடையாது.
அவருடைய ஆகாயத்தில் எல்லாமே பூரண நிலவுகள் நடத்திரங்களே கிடையாது.
இவரைத் தேடிவந்த மைத்துளிகள் கவிதைகளாகத் திரும்பிச் சென்றன!
இவர் நந்தவனத்துக்கு வந்தகாக்கைகள் வானம்பாடிகளாக மாறிவிட்டன!
புழுக்களாகக் கிடந்தவைகள் சிறகுகள் முளைத்து வண்ணத்துப் பூச்சிகளாகப் பறந்து செல்வதுபோல், இவர் கவிதைகளைப் படித்ததும் நமது ஆன்மா சிறகு முளைத்துப் பிரபஞ்சத்தையே சுற்றி வருகிறது.
ஒன்றில் ஞானமும் இன்னொன்றில் அழகும் கொண்ட விழிகளால் உலகைக் கம்பீரமாகப் பார்க்கின்றன கிப்ரானின் எழுத்துகள். ஏனெனில், அவை அமரத்துவம் வாய்ந்தவை!
இரவின் கண்கள் சிந்தி வெளிச்சத்தின் ஸ்பரிசம் பட்டதும் உலர்ந்து போகும் பனித்துளிகள் அல்ல கிப்ரானின் எழுத்துகள்.
அவை பஞ்ச பூதங்கள். பிரபஞ்சம் உள்ளவரை இருக்கும்!
வானத்துக் கீழே மழைத்துளிகளாகச் சிந்திக் கிடக்கும் கிப்ரானின் எழுத்துகளை வாசித்து முடித்ததும் ஏதேதோ உணர்வுகள் நதியாக நெஞ்சில் ஓடுகின்றன.
ஞானத் தேவதையால் சபிக்கப்பட்டவனோ கிப்ரானின் கவிதைகளைப் படிப்பதில்லை.
இவர் எழுத்து ராஜ வீதியில் நடந்து செல்லாதவன் பாதங்கள் இருந்தும் முடவனே!
அவர் எழுத்துக் கோப்பைகளில் நிரப்பி வைத்திருக்கும் கவிதை ரசம் பருகாதவன் ஆன்மாவுக்கு மகிழ்ச்சிக் கிடைக்காது.
கலீல் கிப்ரானின் புத்தகக் கோவில்களில் பிரார்த்தனை செய்து திரும்பாதவனுக்குக் கவிதைவரம் கிடைப்பது அரிது.
கிப்ரானின் ஆங்கில எழுத்துகளைத் தமிழால் அலங்காரம் செய்து உங்களைச் சந்திக்க வைத்திருக்கிறேன். அலங்காரம் அழகல்ல. அலங்கரிக்கப்பட்டதே அழகு.
அதைப் படித்து ரசியுங்கள்.
இந்தப் புத்தக நதியை ஓடவிட்ட பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்துக்கு வணக்கமும் நன்றியும்.
அன்புடன்
துறவி