Description
‘பொருள்கள் எல்லாம் தொழிற் சாலையில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், பிராண்ட் என்பது மனதில் உருவாக்கப்படுகிறது” என்கிறார் பிராண்டிங் துறையின் முன்னோடி வால்ட்டர் லேண்டர் (Walter Landor). நுகர்வோர்களின் மனதை ஈர்க்கவில்லையென்றாலும், தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லையென்றாலும் எவ்வளவு பெரிய நிறுவனத்தின் பொருளும் தோல்வியைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கான சில சமீபத்திய உதாரணங்கள் நோக்கியா அலைபேசியும், கொடாக் புகைப்படச் சுருளும் ஆகும்.
“ஒரு பிராண்ட் என்பது எதிர்பார்ப்புகள், நினைவுகள், அதன் பின்னணி மற்றும் உறவுகளின் தொகுப்பாகும், அவை அனைத்தையும் ஒன்றிணைத்துப் பார்த்துதான் நுகர்வோரானவர் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையை வாங்க முடிவெடுக்கிறார்” என்கிறார் சந்தைப்படுத்தல் மற்றும் தலைமைத்துவத் துறைகளின் ஆலோசகரும் எழுத்தாளருமான சேத் கோடின்.
ஒவ்வொரு புகழ்பெற்ற மனிதருக்குப் பின்னாலும் சுவராசியமான நிகழ்வுகளும் பின்னணியும் இருப்பது போல நுகர்வோர்களாகிய நாம் காலையில் எழுந்திருப்பதிலிருந்து இரவு உறங்கச் செல்வது வரை உபயோகிக்கும் பொருள்களின், சேவைகளின் பெயர்களுக்குப் (பிராண்டுகளுக்கு) பின்னாலும் அதற்கான வரலாறும், சுவராசியமான சம்பவங்களும் இருக்கின்றன. சந்தையில் இருக்கும் எண்ணற்ற பிராண்டுகளில் 36 பிராண்டுகளின் கதையை நூலாசிரியர் சுவைபட எழுதியிருக்கிறார்.
நம்மில் பலருக்கும் FOGG பிராண்ட் பற்றித் தெரிந்திருக்கும் ஆனால் மற்ற டியோடெரண்ட் பிராண்டுகளில் இருந்து இதைத் தனித்துவமாக்கிக் காட்டுவது எது என்பது தெரியாது. அது போல இந்த பிராண்ட் பெயரின் விரிவாக்கம் என்ன என்பதும் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நூலை வாசிப்பதன் மூலம் அதைத் தெரிந்து கொள்ள முடியும். இது போல ஒவ்வொரு பிராண்ட் குறித்தும் பல அரிய, சுவராசியமான தகவல்களை ஆசிரியர் சிரமப்பட்டுத் தேடிக் கண்டுபிடித்து வாசகர்களுக்கு வழங்கியிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
நூலாசிரியர் சுப. மீனாட்சி சுந்தரம் `வாசிப்பைச் சுவாசிப்பாக’க் கொண்டவர். அவர் கண்களிலிருந்து வணிகம் சம்பந்தப்பட்ட எந்தவொரு நூலும் தப்புவதற்கு வாய்ப்பில்லை. கார்பரேட் உலகில் பல நிலைகளில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். சந்தைப்படுத்துதல், துளிர் தொழில் (ஸ்டார்ட்-அப்), மேலாண்மை என தொழில்துறையோடு தொடர்புடைய பல பிரிவுகள் குறித்துத் தொடர்ந்து பல வார, மாத இதழ்களில் எழுதி வருகிறார்.
இந்நூலானது வாசிப்பவர்களுக்கு பிராண்டுகள் குறித்த பல புதிய, அரியத் தகவல்களை அறியத் தரும் தகவல் களஞ்சியமாக இருக்கும் என்பதோடு வாசகர்களுக்கு ஒரு புதிய வாசிப்பனுபவத்தையும் வழங்கும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.
தொடரட்டும் நண்பர் மீனாட்சி சுந்தரத்தின் அறிவுப் பகிர்வு.
நட்புடன்,
சித்தார்த்தன் சுந்தரம்