Description
இதயச் சுரங்கம்
உங்களுடன் ஒரு கணம்…
“மோகம் முப்பது வருஷம்”, “ஆசை வெட்கமறியும்” ஆகிய நாவல்கள் வெளியான பிறகு, ஒரு நண்பரிடமிருந்து என்னுடைய ‘புது அலை’ நாவல்களைப் பற்றிய கடிதம் ஒன்று வந்திருந்தது. ‘இவற்றில் என்னதான் புதுமையை நீங்கள் கையாண்டாலும், உங்களுடைய பழைய நாவல்களைப் படிப்பது போல எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. பழைய மணியனாக உங்களை நான் சந்திக்க முடியுமா?’ என்று அவர் கேட்டிருந்தார்.
இதைப் போல கடிதங்கள் வேறு நண்பர்கள் சிலரிடமிருந்தும் வந்திருந்தன. ‘அவர்கள் விருப்பப்படியே, அந்த நாளைய பாணியில் ஒரு நாவல் எழுதினால் என்ன? என்ற ஆவலும் உண்டாயிற்று. அந்த முயற்சிதான்’ இதயச் சுரங்க’மாகத் தொடங்கி இருக்கிறது.
சமூகத்தில் உயர்மட்ட நிலையில் இருப்பவர்களைப் பற்றியே சமீபத்தில் நான் அதிகமாக எழுதி வந்திருக்கிறேன். அதற்குக் காரணம், அவர்களிடையே நான் காண நேர்ந்த, பொதுவாக வெளியாருக்குத் தெரியாத பல குறைபாடுகள்தாம். அவற்றை அடிப்படையாக வைத்து, அந்தச் சிக்கல்களை அலசுவதற்காக, சற்று துணிச்சலான கதையம்சங்களை வகுக்கத் தொடங்கினேன்.
இப்படிச் சில நாவல்களை எழுதினாலும், என் மனதுக்கு மிக நெருங்கியவை, நான் என்னுடைய வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் கண்டு பழக நேர்ந்த எளிய குடும்பங்கள்தாம். வசதியானவர்களின் வாழ்க்கைச் சிக்கல்களைவிட அவர்களுடையவை ஆழமானவை; நெஞ்சைத் தொடுபவை; நம்மில் பெரும்பாலோர் அன்றாட வாழ்க்கையில் கண்டு உணர்ந்து அனுபவிப்பவை. அவர்களுடைய கதை நம்முடைய கதை.
இப்படி ஒரு குடும்பத்தைத்தான் ‘இதயச் சுரங்க’த்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். இந்தக் கதாபாத்திரங்கள் உங்கள் தெருவிலேயே இருக்கக்கூடும்; இவர்களைத் தினந்தினம் நீங்கள் பஸ்ஸிலும், ஆபிஸிலும், கோயிலிலும், பீச்சிலும் பார்க்கக்கூடும். இவர்களிடையே இழையும் ஒரு வாழ்க்கை – அதில் அமைந்த ஒரு கருத்தோட்டம் – இதுதான் ‘இதயச் சுரங்கம்’. இது நாவல் அல்ல; வாழ்க்கையைச் சுவாரசியமாகக் கதைபோல எடுத்துச் சொல்லும் ஓர் அனுபவம்; அவ்வளவுதான்.
நான் இந்த முயற்சியில் ஒரு புதுமையை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் உங்களுக்குத் தெரிந்த, நன்றாகப் பழகிய சிலராகவே இருக்கலாம். இதே போன்ற நிகழ்ச்சிகள் உங்கள் குடும்பத்திலேயோ, உங்களுடன் நெருங்கிப் பழகியவர்களின் குடும்பத்திலேயோ நேர்ந்திருக்கக்கூடும்.
கதையில் வரும் கமலா, கலா, ஜெயந்தி, மங்களம், முரளி ஆகியவர்கள் தமிழ்நாட்டில் எங்கெங்கேயோ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முயலுகிறேன். என்னுடைய கதையில் வரும் நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரம் உண்மை வாழ்க்கையோடு ஒட்டியவை என்பதையும் நான் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
நாவலை நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறீர்கள். எனக்குத் தெரியும். உங்கள் ஒத்துழைப்பையும் நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
மணியன்