Description
முப்பதுகளின் ஆரம்பத்தில் பிறந்த என்னையொத்த வயதினர் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்திலும், அதன் பின்னர் நாடெங்கிலும் பற்றாக்குறையையும், ஆங்கில அரசின் கண்மூடித்தனமான ஆட்சி முறையையும், நேரில் கண்டவர்களாகவே வளர்ந்தவர்கள். எங்களுக்குக் கற்பித்துக் கொடுத்த பல ஆசான்களும் படிப்பின் இடையில், விடுதலையைப் பற்றிய செய்திகளையும் காந்தியடிகளைப் பற்றிய அன்றாட செய்திகளையும் அவரவர்களுக்குத் தெரிந்த வரையில், எங்களுக்குச் சொல்லிகொண்டிருந்ததும், அன்றைய சுதந்திரப் போராட்டத்தின் சிறந்த வீரராகக் கருதப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் குறித்து அவ்வப்போது பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்ததாலும் எங்களுக்குள்ளும் ஒரு சுதந்திர தாகம் உருவாகிக் கனலாக உருவெடுத்துக் கொண்டிருந்த காலகட்டம். அதிலும் நானும் எனது சகோதரர்களும் அரியலூரில் காந்தியடிகளை அவரது இறுதி தென்னகத்து யாத்திரையின் போது நேரில் கண்டவர்கள்.
ஆகையால் இந்த விவரங்களையெல்லாம், அன்றைய நிகழ்வுகளை நாங்கள் கண்டு அறிந்து கொண்டது போலவே பதிக்கவேண்டுமென்ற விருப்பமுடையவனாகவே இருந்தேன்.
1949ஆம் வருடத்தில் நான் கடற்படையில் கடல், கப்பல் மற்றும் கடல் சார் பொறியியல் பயிற்சியாளனாகச் சேர்வதில் ஆர்வம் காட்டிய எந்தை, அப்போதே நீண்ட கடிதங்கள் எனக்கு எழுதுவார். அவற்றிலும் நாட்டைப் பற்றிய தகவல்களே அதிகம் இருக்கும். அவ்வாறு நான் தெரிந்துகொண்டதையும், முன்னரேயே அவரிடம் கேட்டு ரசித்ததையும் பின்னர் நானாகப் படித்துத் தெரிந்துகொண்டதையும் கலந்து சீராக, காலக் கணக்கீட்டின்படி, காந்தியடிகள் காலமான வரை நிகழ்வுகளின் தொகுப்பாகக் கலந்து அளிப்பதாகச் சொன்னபோது, புதுகைத் தென்றல் பத்திரிகையின் திரு. தர்மராஜன் மிகுந்த மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். அவ்வாறு சுமார் ஐம்பது மாதங்களில் நான் எழுதியமை இப்போது, பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம் மூலமாக ஒரு நூலாக உருவெடுத்துள்ளது. முக்கியமாகப் பல நூலகங்களும், (சிறப்பாக மெட்ராஸ் டெவலப்மெண்ட் சொசைடி நூலகம்) ஆங்கில நூல்களும் உதவி புரிந்தன. ஹிந்து பத்திரிகைக்காக எனக்கு அனுப்பப்பட்ட பல ஆங்கில நூல்களும் உறுதுணையாக நின்றன.