Description
பனை ஓலையும் பழந்தமிழும் என்ற நூலின் தலைப்புக்கேற்ப, பனை ஓலை தொடர்பான அனைத்துத் தகவல்களும், பழந்தமிழர் வாழ்க்கை தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்நூலில் நிரம்பியுள்ளன.
மன்னர் காலத்துக்கு முன்பிருந்து மனிதர்களிடையே தகவல் தொடர்புகள் எவ்வாறு இருந்தன, அதில் ஓலைச்சுவடிகளின் பங்கு என்ன என்பதை நூல் தெளிவாக விளக்குகிறது.
பனை ஓலை தொடர்பான கட்டுரையில் பனை மரத்தின் பயன்கள், பனைமரத்திலிருந்து கிடைக்கும் பொருள்கள், பனைத் தொழிலாளர்களின் வாழ்க்கை, பனை பொருள்களின் விற்பனை என அனைத்துத் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. குடவோலை முறையில் நடந்த தேர்தல்கள் பற்றியும் அதற்கும் பனை ஓலை பயன்பட்டது குறித்தும் தெரிந்துகொள்ள முடிகிறது.
சுவடிகள் செய்வதற்கான தொழில்நுட்பம், சுவடிகளில் எழுதப் பயன்படும் எழுத்தாணியின் வகைகள், சுவடிகளில் எழுதப் பயன்பட்ட பிற பொருள்கள் என எல்லாவற்றையும் பற்றி இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
பழந்தமிழ் எனும் பிரிவில் பழந்தமிழகத்தின் வாழ்க்கை தொடர்பான அனைத்து விவரங்களும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அன்றும் இன்றும் பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு தமிழர் வகுத்த நெறிகளை விளக்கும் தகவல்கள் கூறப்பட்டுள்ளன. சிறிய நூலாயினும் அரிய பல தகவல்கள் நிரம்பிய களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது.