Description
பழந்தமிழர் வரலாற்றை பின்னோக்கிச் சென்று பார்த்தோமேயானால் நம் வரலாற்றில் மூவேந்தர்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகவே இருக்கும். அதாவது மூவேந்தர்கள் (சேர, சோழ, பாண்டியர்) அல்லாத பழந்தமிழர் வரலாற்றை படைக்கவே முடியாது என்று சொல்லலாம். அத்தகைய மூவேந்தர்களில் இன்றுவரை ஒட்டு மொத்த தமிழினத்தின் ஆளுமையின் அடையாளமாகவும், வீரத்தின் அடையாளமாகவும் உலகம் முழுவதும் வாழும் பெரும்பான்மையான தமிழர்களால் ரசிக்கப்படுபவர்கள் சோழர்களே ஆவர். அவர்களில் பிற்காலச் சோழர்கள் அன்று குணக்கடல் என்று அழைக்கப்பட்ட இன்றைய வங்காள விரிகுடாவைச் சார்ந்த தீவுப் பிரதேசங்களையும் விந்திய சாத்பூரா மலைகளுக்குப் தென்புறம் உள்ள பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் பல ஆண்டுகள் வைத்திருந்தவர்கள். அத்தகைய பிற்காலச் சோழர்களின் எழுச்சி ஆரம்பமான காலங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு விறுவிறுப்பான சுவையான கதையை ஆசிரியர் திரு. கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் நாவல் வாயிலாக நமக்குத் தந்துள்ளார். தொடராக வெளிவந்த அக்கதையில் நெடும் தொடருக்குத் தேவையான அன்பு, பாசம், நட்பு, காதல், விசுவாசம், நம்பிக்கை, சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம், பகை மற்றும் போர் என அத்தனை அம்சங்களும் உள்ளடங்கி இருக்கும்.